நேற்றில்லாத ஓர் இடைவெளி
ஒரு பறவை உதிர்த்துச் சென்ற
நீண்ட இறகு ஒன்றை வீட்டிற்கு எடுத்து வந்தேன்
அப்பறவையின் வாழ்வை புரியும் முயற்சியில்
சிறகை முகர்ந்து பார்க்கும்பொழுது
என் நுரையீரல் நிறைகிறது
பரந்த ஆகாயத்தின் நீலநிற வாசனையால்
ஒற்றையாய் திரிந்த ஒரு மேகதுண்டை
தொட்டுப்பார்த்தது போலாகிறது
அவ்விறகை என் விரல்கள் தீண்டும்போதெல்லாம்
என் குழந்தையின் கன்னத்தை அவ்விறகால் தொடும்பொழுது
கூச்சத்தில் குழுங்கிச் சிரிக்கிறது மழலை.
ஏதோ ஒரு மர உச்சியில் அமைந்த சிறுகூட்டுக்குள்
தாயின் சிறகடியில் வெம்மை தேடும் அதன் குஞ்சுகள்
உணர்கின்றன நேற்றில்லாத ஓர் இடைவெளியை
- பா . மீனாட்சி சுந்தரம்