Saturday 14 December 2019

நீலநிற அலைகோதும் நெடுங்கடலில்...

நீலநிற அலைகோதும் நெடுங்கடலில் நீந்துமென்னை
நடுவானில் நின்றுகாணும் நிலா - நான்
கடலடியில் மூழ்காமல் கரையேற வேண்டுமென்று
என்னுடனே நீந்துமிந்த நிலா

நிலவெரியும் வைகறையின் நெருப்பிற்கு முன்பாக
நான்செல்ல வேண்டுமே வீடு - அங்கே
நீர்ததும்பும் விழியோடு நின்றிருக்கும் உயிருன்னைக்
கண்டுசொல்ல வேண்டுமென்றன் பாடு

பெருங்கடலில் படகோட்டி வாழ்கின்ற வாழ்விற்குள்
எதற்குன்னை நானழைத்து வந்தேன் - ஆழம்
அறியாத கடலுக்குள் அன்றாடம் மூழ்கிமூழ்கி
முத்தெடுத்து நானுனக்குத் தந்தேன்

காலையிலே இரைதேடக் கிளம்புகின்ற பறவைநான்
மாலையுன்றன் பசிதீர்த்து மகிழ்வேன் - இன்று
சிறகுடைந்த கிளியாகி சிறுபொந்தில் வசித்தாலும்
சீக்கிரமே நெடுவானில் மிதப்பேன்

உயிர்கலந்த உணர்வோடு உன்னிதழ்கள் உதிர்க்கின்ற
சொல்லெல்லாம் சொல்லென்றா சொல்வேன் ?- அதை
விதையாக்கி நான்தூவ வானெல்லாம் நெல்முளைக்கும்
அதிசயத்தை யாரிடத்தில் சொல்வேன் ?

- பா. மீனாட்சி சுந்தரம் 
https://www.facebook.com/photo.php?fbid=2831666176910694&set=a.228391207238217&type=3&theater

No comments:

Post a Comment