Saturday, 14 December 2019

கனவுகளைத் தீயிலிட எண்ணமோ....

கனவுகளைத் தீயிலிட எண்ணமோ - என்றன்
கற்பனையைக் காலவெள்ளம் தின்னுமோ? - தடைகள்
ஆயிரத்தை உடைத்தெறிந்து ஆகாயம் தொடக்குதித்துப்
பொங்குமிந்தக் கடலுக்கா விலங்கு - என்றன்
விடுதலைக்குப் பேரொன்றை வழங்கு

பசிதீர்க்கப் பாடுவதா வேலை - எனக்குப்
பசிதீரப் பாடுவதே வாழ்க்கை - காலம்
புசிக்கின்ற இரையானேன் என்றென்னை நீநினைத்து
இடுகின்ற எக்காளம் வீணே - உலகை
இரையாக்கி தினமுன்பேன் நானே

நேர்வழியில் என்வாழ்க்கைப் பயணம் - அதனால்
நெஞ்சார வருமெனக்குச் சயனம் - உன்போல்
ஆள்காட்டிப் பிழைக்கின்ற அவமானம் உணராரே
இரவெல்லாம் துயிலின்றித் துடிப்பார் - சூழும்
இருட்டுள்ளும் ஒளியாக நடிப்பார்

கவிஞனென பூமிதனில் பிறந்தேன் - வாழ்வின்
கடைசிநொடி ரகசியமும் அறிந்தேன் - என்னைக்
கவலைக்கு உணவாக்கி கண்ணீரில் மூழ்கடித்து
புன்னகைக்க நினைக்கும்நீ பேதை - எனக்கு
பூமியெங்கும் வெற்றிகளின் பாதை

பாருயரப் பாடுகின்ற பறவைநான் - என்றன்
பாட்டெல்லாம் காற்றுரைக்கக் கரைவேன்நான் - இன்றென்
நிலைகேட்டு மழையாக அழுகின்ற மேகத்தின்
கண்ணீரை என்விரல்கள் துடைக்கும் - இந்தக்
கார்காலம் மீண்டுமெனைப் படைக்கும் 

- பா. மீனாட்சி சுந்தரம்
https://www.facebook.com/photo.php?fbid=2831349636942348&set=a.102912233119449&type=3&theater

No comments:

Post a Comment